Home | About us | Isaikethu Ellai | Akkni Kunchuhal | Videos | Lyrics | Pictures | Tamil | Contact us

கர்னாடக இசையின் நுழைவாயில் இசைக்கு ஏது எல்லை

இசையில் மனம் இசையும். ஆம், முறையாக இசைக்கப்படும்போது கேட்பவர் எவரையும் தன்வயப்படுத்தும் சக்திமிக்கது இசை. ஆனால் ஏன் எம்மிடம்; அது இல்லை.

சிலப்பதிகாரகூற்றுப்படி பாணர்களுக்கிiடையே இலக்கணஇசைப்போட்டி ஸ்வரபேதத்தில்கூட நடைபெற்றிருக்கின்றது. அப்போதெல்லாம் மனோதர்மம் நிறைய பிரயோகிக்கப்படும். ஸ்வரக்கட்டுப்பாட்டுக்குள்நின்றுகொண்டு தான் எடுத்துக்கொண்ட பாடலின் மெட்டை விரிவுபடுத்தி அழகுபடுத்தி வித்தியாசமான சங்கதிகளை வெளிக்கொணர்தல் மனோதர்ம வித்துவம் என கொள்ளப்பட்டது. இப்படி எம்மவர்கள் இலக்கண இசையிலே புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் இந்தியாவுக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மொகலாயர்கள் எமது இலக்கண இசையைகண்டு வியந்து, தமது நாட்டு இசைவிற்பன்னர்களை அழைத்து எமது இசையைபயின்று, தமக்கும் அப்படியொரு இசைவடிவத்தை உருவாக்கும்படி மொகலாய மன்னன் கட்டளையிட்டதால் பிறந்ததுதான் ஹிந்துஸ்தானி இசை. ஆனால் அந்த ஹிந்துஸ்தானி உலகப்புகழ் பெற்ற அளவிற்கு கர்நாடகஇசை உயராதது ஏன்?

சாஸ்திரிய இசையை புரிவதற்கு முதிர்ச்சி தேவை. அம் முதிர்ச்சியை பெற அனுபவம் தேவை. அந்த அனுபவத்தை பெறும் நுழைவாயிலாக ஹிந்துஸ்தானிக்கு ஹசல் இருப்பதுபோல எமக்கு ஏதுமே இல்லாததுதான் காரணமா? ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் பலர் எமது இசைமேதைகளிடம் மிக நுணக்கமான இசைநுட்பங்களை கற்றுக்கொண்டாலும் இசைக்கும்போது மிக லாவகமாக நளினமாக வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் எம்மவர் சுருதியும் லயமும் ஆதாரமேயொழிய பிரதானமானது ராகம் என்பதை மறந்து சிக்கலான தாளக்கோர்வைகளுக்குள் போய்விடுவதுதான் காரணமா? இந்தச்சம்பிரதாயம் காலம்காலமாக இருந்துவந்ததாலோ என்னவோ எம்மக்கள் அந்த இசைப்பக்கம் காலையே வைப்பதில்லை.

இன்று ரொறன்ரோவிலே ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த சாஸ்திரிய இசையை தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பயில்கின்றார்கள். ஆனால் அவர்களோ அன்றி அவர்கள் இந்த இசையை பயிலவேண்டும் என நினைக்கும் பெற்றோர்களோ பல இசைநிகழ்ச்சிகளுக்கு வராததற்கு காரணமும் இதுதானா? சாஸ்திரியத்துக்குள் நின்றுகொண்டு சாதாரண இசைஆவலர்களையும் கவரும் வண்ணம் இசைக்கமுடியாதா? தெம்மாங்கு இசைக்கும் இலக்கண இசைக்கும் பாலமமைக்க முடியாதா? இன்னும் ஈழத்தவர்கள் வேற்றவரின் இசையிடம் அடிமைப்பட்டிருக்கின்றார்களே அதிலிருந்து விடுதலை பெறமுடியாதா? எமக்கென்றோர் இசைவடிவம் தோற்றுவிக்கப் படக்கூடாதா? என ஒருசிலர் எண்ணியதன் விளைவுதான் இசையரங்கம். உலகிற்கே இசையிலக்கணத்தை உருவாக்கிக்கொடுத்த எங்கள் இசைக்குள் அடங்கியிருக்கும் அற்புதமான விஷயங்களை எம்மவர் புரிந்து கொள்ளவழிமுறைகள் சமைக்கவேண்டும்என்கின்ற இலட்சியம் இசையரங்கத்திடம் உண்டு. மெல்லிசை ரசிகர்களின் கரம்பற்றி மெல்ல அழைத்துவந்து சாஸ்திரிய நதியில் நீராடவைப்பதானால் அவர்களருகே சென்றமர்ந்து அவர்கள் மொழியில் உரையாடி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டிய தேவையை இசையரங்கம் உணர்ந்திருக்கிறது. அவர்களோடு வாதாடும்போது அவர்களுக்கு புரியாத விஷயங்களைப்பற்றி வாதாடாமல் அவர்களின் நாளாந்த பிரச்சனையை கருவாக கொள்ளவேண்டிய அவசியத்தை இசையரங்கம் புரிந்திருக்கின்றது. கலையால் கலைஞன் வாழும் நிலை வரும்போதுதான் கலை வளரும் என்கின்ற கோட்பாட்டை இசையரங்கம் மதிக்கின்றது. இத்தேவைகளை நிறைவேற்ற இசையரங்கம் எடுத்த செயற்பாடுதான் இசைக்கு ஏது எல்லை என்கின்ற நிகழ்ச்சி.. கர்னாடக இசையின் நுழைவாயில் இசையரங்கத்தின் இசைக்கு ஏது எல்லை. மிகவும் வித்தியாசமான இன்னிசை நிகழ்ச்சி.

திருப்தியடைந்தவனிடம் தேடலிருக்காது. தேடலுள்ளவன் சம்பிரதாயம் சடங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்.